வைகுண்ட ஏகாதசி புராண வரலாறு | விரத முறைகள்

ஏகாதசி தோன்றிய புராண வரலாறு

கிருதயுகத்தில் முரன் என்ற அசுரன் இருந்தான். அகந்தையால் அக்கிரமம் செய்துகொண்டிருந்த அவனை அழிக்க மகா விஷ்ணு முரனை புறப்பட்டார். மாபெரும் யுத்தம் நிகழ்ந்தது. முரனின் படைகள் எல்லாம் அழிந்தன. அவன் மனம் மாற ஒரு வாய்ப்பு கொடுக்க நினைத்த விஷ்ணு பத்ரிகாசிரமத்தில் உள்ள குகை ஒன்றில் போய் யோக நித்திரையில் ஆழ்ந்தார்.

இறைவனுக்கு ஏது உறக்கமும் விழிப்பும். அது ஒரு பாவனை. ஆனால் அசுரன் அதை அறியவில்லை. மகாவிஷ்ணு உறங்குகிறார். இப்போது அவரைத் தாக்கினால் அழித்துவிடலாம் என்று நினைத்து வாளை ஓங்கினான். அப்போது விஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகிய பெண் வெளிப்பட்டாள். அவள் அசுரனை நோக்கி ஓர் ஓங்காரம் எழுப்பினாள். அந்த ஓங்கார ஒலியில் எழுந்த அக்னி அசுரனை பொசுக்கியது. அப்போது கண் விழித்த விஷ்ணு அந்தப் பெண்ணைக் கண்டு, ‘நீ யார்… நடந்தது என்ன?’ என்று கேட்க அவள் பணிவோடு, ‘நான் தங்களிடம் இருந்து தோன்றியவள். என் சப்தத்தால் அசுரன் அழிந்தான்’ என்று கூறினாள். இதைக் கேட்டு மகிழ்ந்த விஷ்ணு,

“நான் உனக்கு ஏகாதசி என்று பெயரிடுகிறேன். நீ தோன்றிய இந்தத் திதி மிகவும் புண்ணியம் நிறைந்ததாகக் கருதப்படும். அந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்” என்று அருளினார். அன்று முதல் பெருமாளை வழிபட உகந்த நாளாக ஏகாதசி திதி மாறியது. ஏகாதசி உற்பத்தியான நாள் என்பதால் மார்கழி மாதம் வரும் ஏகாதசி உத்பன்ன ஏகாதசி என்று போற்றப்படுகிறது.

மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படும். மது, கைடபர்கள் ஆகிய அசுரர்கள் பகவான் விஷ்ணுவோடு யுத்தம் செய்து முடிவில் அவரின் பராக்கிரமத்தை அறிந்து அவரைச் சரணடைந்து தங்களுக்கு வைகுண்டப் பதவி வேண்டும் என்று கேட்டனர். விஷ்ணுவும் மகிழ்ந்து சொர்க்க வாசலைத் திறந்து அவர்களை வைகுண்டத்தில் சேர்த்துக்கொண்டார். அப்போது, ”பகவானே! மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி திதியான இந்த நாளில் எங்களுக்கு சொர்க்க வாசலைத் திறந்து அருளியதுபோன்று யாரெல்லாம் தங்களின் ஆலயத்துக்கு வந்து உங்களை வணங்குகிறார்களோ அவர்களுக்கும் சொர்க்க வாசலைத் திறந்து வைகுண்டப் பதவியை அருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டனர். மகாவிஷ்ணுவும் அவ்வாறே ஆகட்டும் என்று வரம் தந்தார். அதன் சாட்சியாகவே இன்றும் பெருமாள் ஆலயங்களில் வைகுண்ட வாசல் திறக்கும் வைபவம் ஒவ்வொரு மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்றும் நடைபெறுகிறது. இந்த நாளில் சொர்க்க வாசல் வழியாக நுழைந்து சென்று பெருமாளை வைகுண்டவாசனாகக் கண்டு தரிசனம் செய்தால் மோட்சம் நிச்சயம் என்பது ஐதிகம்.

கடைப்பிடிக்க 5 விஷயங்கள்:

வைகுண்ட ஏகாதசி என்றாலே இரவு விழித்திருப்பது என்பது பிரசித்தம். உறங்காமல் இருந்தால் மட்டும் போதாது. பெருமாளை நினைத்து பஜனை செய்ய வேண்டும். வைகுண்ட ஏகாதசி வைபவமே தமிழ் மறைகளான நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தைப் போற்றுவதற்காக உருவாக்கப்பட்டதுதான். அப்படிப்பட்ட அந்த வைபவத்தில் நாம் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களைப் பாடிப் பெருமாளை வழிபடுவது விசேஷம். பாசுரங்கள் பாடத் தெரியாது என்பவர்கள் ராமா, கிருஷ்ணா, நாராயணா என்று தெய்வ நாமங்களை ஜபம் செய்து கொண்டிருந்தாலே போதுமானது. அதிகாலை வேளையில் ஹரிநாம ஜபம் செய்வதன் மூலம் பெருமாளின் அருளுக்குப் பாத்திரர் ஆகலாம்.

ஏகாதசி நாளில் உணவுக் கட்டுப்பாடு அவசியம். பொதுவாக தசமி நாளில் இருந்தே விரதம் தொடங்கிவிடும். தசமி இரவு உணவைத் தவிர்த்துவிடவேண்டும். மறுநாள் ஏகாதசி நாளில் முற்றிலும் ஆகாரம் இல்லாமல் இருப்பது உத்தமம். துளசித் தீர்த்தம் சாப்பிடலாம். முடியாதவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் அரிசியை பின்னம் செய்து தயாரிக்கப்படும் கஞ்சி, உப்புமா போன்றவற்றை சாப்பிடலாம். பழங்கள், பால் ஆகியவற்றை பெருமாளுக்கு நிவேதனமாக சமர்ப்பித்து அதை எடுத்துக்கொள்வது விசேஷம். மறுநாள் துவாதசி அன்று காலை பெருமாளை தரிசனம் செய்து பின் துளசி தீர்த்தம் அருந்தி உணவெடுத்துக்கொள்ள வேண்டும் என்பார்கள். இதற்குப் பாரனை என்று பெயர்.

வைகுண்ட ஏகாதசி அன்று கட்டாயம் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது சிறப்பு. இதன் மூலம் மனமும் உடலும் புத்துணர்ச்சி கொள்ளும். அவ்வாறு பெருமாள் கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள் வீட்டில் அதிகாலையில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். பெருமாளுக்கு துளசி சமர்ப்பணம் செய்து வணங்க வேண்டும்.
பகலில் உறக்கம் கூடவேகூடாது. இரவெல்லாம் விழித்திருந்தோமே என்று சொல்லிப் பகலில் உறங்குவது முறையல்ல. பகலிலும் இறைவழிபாட்டிலேயே செலவிட வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பலரும் அலுவல் காரணமாகப் பணிக்குப் போக வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே முழு நேரமும் இறைவழிபாடு செய்துகொண்டிருக்க முடியாது. ஆனால் தவறாமல் சந்தி வேளைகளான நண்பகல், பிரதோஷ வேளைகளில் இறைவனை நினைத்து மனதுக்குள் வழிபட வேண்டியது அவசியம். மனம் ஒன்றிச் செய்யும் சில நிமிட வழிபாடு நமக்குப் பெரும்பலனைத் தரும். மறுநாள் துவாதசி அன்று பாரனை முடிந்து உணவருந்தும் முன்பாக தானம் செய்வது சிறப்பு. துவாதசி அன்று தன் வீட்டு வாசலுக்கு வந்து பிக்ஷை கேட்ட ஆதிசங்கரருக்குக் கொடுக்க ஏதும் இல்லையே அன்று வருந்தித் தன்னிடம் இருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை தானம் செய்தாள் ஒரு பெண். அந்தப் பெண்ணின் வறுமையை உணர்ந்த சங்கரர், கனகதாரா ஸ்தோத்திரம் பாட அன்னை மகாலட்சுமி பொன்மாரிப் பொழிந்தாள். இது உணர்த்தும் செய்தி, துவாதசி அன்று கட்டாயம் தேவையிருப்போருக்கு தானம் செய்ய வேண்டும் என்பதுதான். அவ்வாறு செய்யும்போது இறைவனின் அன்புக்கும் கருணைக்கும் உரியவர்களாக நாம் ஆவோம்.

error: Content is protected !!
Call Now