திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் (புதன் பகவான்)
இறைவர் | சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர். |
---|---|
இறைவி | பிரமவித்யாநாயகி |
தல மரம் | வடஆலமரம் |
தீர்த்தம் | முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்) |
வழிபட்டோர் | பிரம்மன், இந்திரன், வெள்ளையானை |
தேவாரப் பாடல்கள் | சம்பந்தர் – 1. கண்காட்டு நுதலானுங், 2. உண்டாய் நஞ்சை, 3. மந்திர மறையவை
அப்பர் – 1. பண்காட்டிப்படி, 2. தூண்டு சுடர்மேனித் சுந்தரர் – 1. படங்கொள் நாகஞ் |
திருவெண்காடு கோவில் வரலாறு
இங்கு வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள்; ஆதலின் அம்பாளுக்கு பிரமவித்யாம்பிகை என்று பெயர் வந்தது. சலந்தரன் மகன் மருத்துவன்; இறைவனை நோக்கித் தவம் செய்தான், இறைவன் காட்சி கொடுத்து சூலத்தைத் தந்து அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறியுறுத்தி அருள் செய்தார். ஆனால் மருத்துவனோ அதைத் தேவர்கள் தவம்செய்யவொட்டாதவாறு துன்புறுத்தப் பயன்படுத்தினான். இதையறிந்த இறைவன் சினந்து நந்தியை அனுப்பினார்; மருத்துவன் மாயச் சூலத்தை அவர்மீது ஏவ, அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்துவிட்டுப் போயிற்று. இஃதறிந்த இறைவன் தாமே அகோரமூர்த்தியாக (இத்தலத்தில் சிறப்பு மூர்த்தியாக அகோரமூர்த்தியே உள்ளார்.) வடிவுகொண்டு வந்து அவனை அழித்தார் என்பது வரலாறு. அவ்வாறு அழித்த (மாசிமகத்து மறுநாள்) நாள் ஞாயிற்றுக்கிழமை பூர நட்சத்திரம். இவ்வரலாற்றையொட்டிச் சுவாமிக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம்.
திருவெண்காடு கோவில் சிறப்புக்கள்
- திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள்தான் விலகும். ஆனால் திருவெண்காடு தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தைமுறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
- புதன் திசை ஒவ்வொரு வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்கிறார்கள். 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது.
- ஆலயங்களில் 28 வகையான ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு வகையான ஆகமம் கடைப்பிடிக்கப்படும். ஆனால் திருவெண்காடு தலத்தில் 3 வகை ஆகமங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
- பொதுவாக புதன் கிரகத்தை ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத அலி கிரகம் என்று சொல்வார்கள். ஆனால் திருவெண்காட்டில் புதன் பகவான் ஆண் கிரகமாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
- திருவெண்காடு புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைகூடும்.
- திருவெண்காட்டில் உள்ள 3 குளத்திலும் நீராடி பிள்ளைஇடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைபேறு கிடைக்கும்.
- சுவாமி, அம்மன், புதன் மூவருக்கும் முறைப்படி பூஜை செய்தாலும் குழந்தை நிச்சயம் உண்டு.
- திருவெண்காடு அகோரமூர்த்தியை குலதெய்வமாக ஏற்று வழிபடுபவர்கள் நாகை மாவட்டத்தில் கணிசமாக உள்ளனர்.
- திருவெண்காடு தலத்தில் ஹோமம் செய்தால் பில்லிசூனியம், திருஷ்டிகள் விலகும். கோர்ட்டு வழக்கு களில் வெற்றி கிடைக்கும்.
- அகோரமூர்த்தியை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும். சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்டு மனகசப்பும், கருத்து வேறுபாடுகளும் விலகும்.
- திருவெண்காடு தலம் மொத்தம் 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள சன்னதிகளை பொறுமையாக பார்த்து வந்தால் ஆலய வழிபாட்டுக்கான ஆத்ம திருப்தியை பெறலாம்.
- திருவெண்காடு தலத்தில் புதனை வழிபட வருபவர்களில் சிலர் நேரிடையாக புதன் சன்னதிக்கே சென்று விடுகிறார்கள். இது தவறு. முதலில் சுவாமியையும், பிறகு அம்பாளையும் வழிபட்ட பிறகே இறுதியில் புதன் சன்னதிக்கு சென்று பரிகார பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.
- இத்தலத்தில் முறைப்படி பூஜைகள் செய்ய விரும்புபவர்கள் விநாயகர், மூலவர், அகோர மூர்த்தி, அம்பாள் மற்றும் புதன் ஆகிய 5 பேருக்கும் தவறாமல் தனித்தனியாக அர்ச்சனை செய்ய வேண்டும்.
- இத்தலத்தில் உள்ள காளியின் சிலை பயங்கரமான முக வடிவமைப்புடன் உள்ளது. ஆனால் இந்த காளி சாந்தமானவள். பக்தர்கள் கேட்கும் வரம்களை எல்லாம் தவறாது தருபவள்.
- காளி சன்னதியின் முன்பு மிகப்பெரிய பலி பீடம் உள்ளது. இந்த பலிபீடம் மிக மிக சக்தி வாய்ந்தது. எனவே இந்த பலி பீடத்தை பக்தர்கள் தொடாமல் வணங்க வேண்டும்.
- இத்தலத்தில் உள்ள அகோரமூர்த்தி சன்னதி மண்ட பத்தில் தர வரலாறு ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது.
- நடராஜர் சன்னதி சிதம்பரம் தலத்தில் இருப்பது போன்றே வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது.
- திருவெண்காடு தலத்தில் சுற்றுப்பிரகாரங்கள் நல்ல பெரியதாக உள்ளன. ஆங்காங்கே மரங்கள் இருப்பதால் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி உள்ளது.
- சுற்றுலா வருபவர்கள் மற்றும் புதன்கிழமைகளில் வருபவர்கள் ஆலய மண்டபத்தில் தங்குவதற்கு வசதி உள்ளது. பக்தர்களுக்காக புதன்கிழமை மட்டும் மதியம் கூடுதலாக சில மணிநேரம் பூஜை நீடிக்கிறது. எனவே பூஜை நேரத்தை கணக்கிட்டு சுற்றுப்பயணத்தை அமைப்பது நல்லது.
பிரார்த்தனை: இங்கு கல்வி, தொழிலுக்கு அதிபதியான புதனுக்கு தனி ஆலயம் உள்ளது. கல்வி மேன்மையடைய, தொழில் சிறக்க, பிணி நீங்க, பிள்ளைப்பேறு பெற புதனை வழிபட்டால் மேன்மையடைவது உறுதி. இத்தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது.21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும். இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா.
பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும். குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது. மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும்.
இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
நேர்த்திக்கடன்: நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலம் ஆகும். புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து வெண்காந்தள் மலர் சூட்டி,பாசிப்பருப்புப் பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்ய வேண்டும். உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் புதன் பகவானை வழிபட வேண்டும்.
? திருமண தோசம், புத்திர தோசம் உள்ளவர்கள் புதன் பகவானுக்கு பதினேழு தீபம் ஏற்றி பதினேழு முறை வலம் வந்து வழிபடுகிறார்கள். சுவாமிக்கு மா , மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி, பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோவில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.