ஆடிப்பூரம் விரதம்
ஆடி மாதத்தில் வரும் பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆடிப்பூர நாளில்தான் அன்னை பூமாதேவியே ஸ்ரீ வில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் ஆண்டாளாக அவதரித்தார். ஆடிப்பூரம் விரதம் இருந்து அம்மனை தரிசித்தால் திருமண வரம் கிடைக்கும் வளைகாப்பிற்கு வளையல் வாங்கிக் கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள். ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திர நாள் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். சித்தர்களும், முனிவர்களும் இந்த நாளில்தான் தங்களுடைய தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. இந்த புண்ணிய தினத்தில் ஆண்டாள் ஆலயத்துக்கு சென்று வழிபடுவதன் மூலம் திருமணமாக பெண்களுக்கு கல்யாண வரம் கிடைக்கும். எம் பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள்.
சுக்கிரனின் அருள்
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இனிமையாக பேசுவார்கள். அனைவரையும் நேசிப்பார்கள். அனைவரையும் நேசிக்க வைப்பார்கள். பூரம் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரம். சுக்கிரனின் தெய்வம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். எனவேதான் ஆடிப்பூரத்தில் பிறந்த ஆண்டாள் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை நேசித்து அவரையே மணந்தாள். காதல் கைகூடவும், மனதிற்கு பிடித்த நபரை கை பிடிக்கவும் சுக்கிரபகவானின் அருள் வேண்டும். சுக்கிரன் அருள் இருந்தால் கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும், தாம்பத்ய ஒற்றுமைக்கும் காரணம் சுக்கிரனே. எனவேதான் பூரம் நட்சத்திரத்தில் விரதம் இருந்தால் திருமண வரம் கிடைக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர்.
அம்மனுக்கு வளைகாப்பு
உலகத்தை படைத்து, காத்து, ரட்சித்து அருளும் அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக் காப்பு நடத்துவார்கள். ஆனால் அன்னைக்கு வளைகாப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனிச் சிறப்பாகும். எனவே உலக உயிர்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் அன்னைக்கு இந்த நாளில் வளைகாப்பு நடத்தப்படுகிறது. வளைகாப்பு முடிந்ததும் அன்னையை அலங்கரித்த வளையல்கள் அனைத்தும் பெண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.