வீட்டில் பூஜை செய்யும் முறை?
ஸ்ரீ பிரணவ ஜோதிடாலயம் | Posted on |
வீட்டில் பூஜை செய்யும் பொழுது கட்டாயம் பஞ்சபூதங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். பஞ்சபூதம் இருக்கும் இடங்களில் தான் இறைவன் வாசம் செய்கிறார் என்கிற ஐதீகம் உண்டு. நாம் வீட்டில் சாமி கும்பிடும் பொழுது வேண்டிய வேண்டுதல்கள் பலிக்காமல் போவதற்கு நாம் செய்யும் இந்த சில விஷயங்களும் காரணமாம்! வேண்டிய வேண்டுதல் உடனே பலிப்பதற்கு பூஜை செய்யும் பொழுது என்னென்ன கண்டிப்பாக இருக்க வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.
வீட்டில் பூஜை செய்பவர்கள் கட்டாயம் பூஜை அறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தூசுகள் நிறைந்துள்ள இடங்களில் தெய்வங்கள் வசிப்பதில்லை. குறிப்பாக மகாலட்சுமிக்கு பதிலாக அங்கு துர் தேவதைகள் வாசம் செய்யும். எனவே பூஜை அறையை சுத்தமாக வைத்திருந்து அதில் பஞ்சபூதங்கள் இடம் பெற்றிருக்குமாறு பூஜை செய்ய வேண்டும்.
நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய இந்த ஐந்து பூதங்களும் பூஜை அறையில் கண்டிப்பாக இருப்பது அவசியமாகும். நிலம், ஆகாயம், காற்று ஆகிய மூன்று பூதங்களும் நீக்கமற நிறைந்துள்ளன. நிலத்தில் தான் பூஜை அறை அமைய பெற்றிருக்கிறது. ஆகாய மார்க்கமாகத்தான் பூஜை பொருட்கள் அனைத்தும் வைக்கப்பட்டிருக்கும். காற்று எங்கும் காணப்படுகிறது. பூஜை அறை திறந்த நிலையில் இருக்க வேண்டும் எல்லா பக்கங்களும் அடைபட்டிருக்குமாறு பூஜை அறை அமைக்கக் கூடாது. மீதமிருக்கும் இரண்டு பூதங்கள் ரொம்பவும் அவசியமாகும். நெருப்பு மற்றும் நீர் பிரதானமாக வைத்து பூஜையை துவங்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
விளக்கு ஏற்றுவதால் உண்டாகக்கூடிய ஜோதியில் தான் இறைவன் ஆவாகனம் ஆகின்றார். நாம் வேண்டிய வேண்டுதல்கள் அனைத்தும் நீர் வழியாகத்தான் ஆவாகனம் ஆகிறது. எனவே இவ்விரண்டு பூதங்களும் அன்றி நாம் பூஜையை துவங்கக் கூடாது. விளக்கு ஏற்றி சூடம் காண்பிக்கும் பொழுது ஒளிரும் ஜோதியில் இறைவனை நாம் காண வேண்டும்.
இறைவனுடைய திருப்பாதங்களில் இருந்து திருமேனி தரிசிக்க வேண்டும். அதனால் தான் பாதங்களிலிருந்து ஆரம்பித்து பொட்டு வைக்க வேண்டும். மஞ்சள், குங்குமம் கொண்டு பொட்டு வைத்து வழிபட்டால் கண்ணுக்கு தெரியாத இறைவன் நம் மனதில் தோன்றுகிறார். விளக்கு ஏற்றாமல் பூஜை துவங்க படுவதில்லை, எனவே நெருப்பு வந்து விடுகிறது. ஆனால் நீர் என்பது கட்டாயம் நாம் வைக்க வேண்டியது அவசியமாகும். நீரில்லாமல் பூஜையை துவங்கக் கூடாது. நீரை நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எந்த ஒரு பாத்திரத்தை பயன்படுத்தியும் படைக்கக் கூடாது. அதற்கென தனியாக பஞ்சபாத்திரம், கலசங்கள் போன்றவை வைக்கப்பட வேண்டும். எனவே பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைக்காமல் பூஜையை துவங்கக் கூடாது. நீங்கள் வேண்டிய வேண்டுதல் அந்த தண்ணீரில் ஆவாகனம் ஆகும். தண்ணீரை கவனித்தால் நீங்கள் வேண்டிய வேண்டுதல்கள் சலனம் ஆகும். நாளுக்கு நாள் தண்ணீர் காற்றில் குறைய ஆரம்பிக்கும். எனவே தண்ணீரை எப்பொழுதும் காக்க வைக்கக்கூடாது. தண்ணீர் வைத்த பிறகு பூஜையை தொடங்கி, பூஜையை நிறைவு செய்த பின்பு அந்த தண்ணீரை வீட்டில் இருக்கும் அனைவரும் பருகிவிட வேண்டும்.
கோவில்களில் தீர்த்தம் கொடுக்கப்படுவது போல, பஞ்சபாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீர் தீர்த்தமாக வேண்டும். அதை வீணாக கீழே கொட்டுவதோ அல்லது அப்படியே விட்டு விடுவது போன்ற செயல்கள் செய்தால் உங்கள் வேண்டுதல் பலிக்காமல் போகும் வாய்ப்பு உண்டு, எனவே இந்த தவறை ஒரு போதும் இனியும் செய்யாதீர்கள். எல்லா கோவில்களிலும் தீர்த்தத்தில் பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காய், துளசி இலைகள் போன்றவை அந்தந்த கோவிலுக்கு ஏற்ப சேர்ப்பது உண்டு. அதே போல வீட்டிலும் நோய் நொடி இல்லாமல் இருக்க பஞ்ச பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் சிறிதளவு பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, துளசி இலைகள், வில்வ இலைகள் போன்றவை உங்களிடம் இருக்கும் ஏதாவது சிலவற்றை போட்டு அது தீர்த்தம் ஆகிய பின்பு பூஜையை தொடங்குங்கள். அதன் பின்பு அந்த தீர்த்தத்தை குடித்து பயன்பெறுங்கள்.