சக்கரத்தாழ்வார் ஜெயந்தி பலன்கள்

மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின் கையில் இருக்கக்கூடிய பல்வேறு ஆயுதங்களில் முக்கியமானது ஸ்ரீ சக்கரம். மகாவிஷ்ணுவின் வலது கையில் இருக்கும் இந்த சக்கரம் பகைவரை அழிக்கும் ஆயுதமாகும்.

ஆனி மாதத்தில் வரக்கூடிய சித்திரை நட்சத்திரத்தில் சக்கரதாழ்வார் ஜெயந்தி திருநாள் ஆகும். இருப்பினும் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சித்திரை நட்சத்திரத்தின் போது சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். அதோடு வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை மிகவும் விசேஷ தினமாகும்.

விஷ்ணுவுக்கு சக்கரத்தை வரமாக அளித்த சிவன் பெருமான் :

சிவபெருமானை திருவீழிமிழலை தலத்தில் மகாவிஷ்ணு ஆயிரம் தாமரைப் பூக்களை கொண்டு தினமும் அர்ச்சனை செய்து பூஜித்து வந்தார். ஒருநாள் 1000 தாமரைப் பூக்களில் ஒன்று குறைந்து காணப்பட்டது. அதனால் 999 தாமரைப் பூக்களை கொண்டு அர்ச்சனை செய்த விஷ்ணு, 1000வது தாமரையாக தனது கண்களில் ஒன்றை தாமரையாக்கி அர்ச்சித்து பூஜையை முழுமை செய்தார். இதனால் மனமகிழ்ந்த சிவபெருமான் சக்கராயுதத்தை மகாவிஷ்ணுவிற்கு வரமாக வழங்கியதாக திருவீழிமிழலை தலபுராணம் கூறுகிறது.

சுதர்சனனின் மற்ற பெயர்கள் :

சக்கரத்தாழ்வாருக்கு திருவாழியாழ்வான், ஸ்ரீ சுதர்சனர், ஸ்ரீ சக்கரம், திகிரி எனும் திருநாமங்கள் உள்ளன. சுதர்சனம் மங்களமானது. ஸ்ரீ சுதர்சனர் என்றால் நல்வழி காட்டுபவர் என்று பொருள்.

சக்கரதாழ்வார் தனி சன்னதி :

எல்லா பெருமாள் திருக்கோயில்களில் சக்கரத்தாழ்வாருக்கு தனிச்சன்னிதி அமைந்திருக்கும். ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள சக்கரத்தாழ்வார் மிகுந்த சக்தி வாய்ந்தவராக வழிபட்டு வருகின்றனர். அரங்கனை தரிசித்து வந்த உடன் அமைந்திருக்கும் சக்கரதாழ்வார் சன்னதியில் வாரந்தோறும் தரிசித்து வந்தால் அற்புத பலன்கள் பெறலாம்.

இதே போல மதுரையில் ஒத்தக்கடை அருகில் உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் சக்கரத்தாழ்வாருக்கு என தனி சன்னதி உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை சக்கரத்தாழ்வாரை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் ஏராளமாக வந்து வழிபடுவது வழக்கம்.

error: Content is protected !!
Call Now