கார்த்திகை தீப திருநாள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் 2668 உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பக்தர்களுக்கு இந்த ஆண்டு தீப திருவிழாவை நேரடியாக காண தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகளில் நேரலைகளில் ஒளிபரப்பான காட்சிகளைக் கண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தர்கள் முழக்கமிட்டனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழாவின் 10ம் நாளான இன்று அதிகாலை மூன்றரை மணிக்கு அண்ணாமலையார் கருவறை முன்பாக ஏகன் அனேகனாக மாறியும், அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் அருணாச்சலேஸ்வரர் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணியளவில் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதேநேரத்தில் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியின்மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது. இதையொட்டி, தீபம் ஏற்றுவதற்கான மகா தீபக் கொப்பரை நேற்று மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை முழுவதும் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் இன்று முதல் மகா தீபம் காண திருவண்ணாமலை நகருக்கு வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண பக்தர்கள் மலையேறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கார்த்திகை மாத பவுர்ணமி நாளை மதியம் 1.17 மணிக்கு தொடங்கி திங்கட்கிழமை மதியம் 2.23 மணிக்கு நிறைவு பெறுகிறது. கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதால் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.