மாந்தி தோஷம் – என்ன பரிகாரம் செய்தால் தோஷம் நீங்கும்?
மாந்தி கிரகம் சனிபகவானின் மைந்தன் என்றும், சனியின் உப கிரகம் எனவும் ஜோதிடர்கள் அதன் அமைப்பை வைத்து பலன்கள் கூறுகின்றனர். சனியின் வெட்டுப்பட்ட காலில் இருந்து உருவானவர் மாந்தி. தமிழக தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா மக்கள் ஜாதகம் எழுதும் போது, மாந்திக்கு முக்கியத்துவம் தருவர். மாந்தி தோஷம் உள்ளோர் அதற்குரிய பரிகாரம் செய்து வழிபடலாம்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்துக்கு 2,5,8,11 ஆகிய இடத்தில் மாந்தி இருந்தால் அவர் செய்த புண்ணியங்கள், பாவத்திற்கான பலன்கள் அடுத்த பிறவில் அனுபவிக்க வாய்ப்புள்ளது. அதே போல் 1,4,7,10 ஆகிய இடத்தில் அமைந்திருப்பின், அவர் செய்யும் புண்ணியம், பாவத்திற்கான தண்டனைகள் அப்போதே அதாவது அவருக்கு ஏழரை சனி, அஷ்டமசனி வரக் கூடிய காலத்தில் அனுபவிக்க நேரிடும்.
மாந்தி எங்கிருந்தால் என்ன பாதிப்பு லக்கினத்தில் அதாவது முதல் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் மறைமுக உடல் நோய்கள் கொண்ட குண்டான உடலமைப்பைப் பெற்றிருப்பார். சுப கிரக சேர்க்கை இருப்பின் அவருக்கு பொன், பொருள் சேரும். 2வது இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் அவரின் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமலும், பேச்சு, செயலில் தடுமாற்றம் ஏற்படும். 3வது இடத்தில் மாந்தி இருப்பின் பல நல்ல பலன்கள் கிடைக்கும். தைரியமானவராகவும், துணிவு மிக்கவராகப் பலரை வழிநடத்தக் கூடிய திறனை பெற்றிருப்பார். புதிய முயற்சிகள் செய்து வெற்றிகளைக்குவிப்பார். ஜாதகத்தில் 4ஆம் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதித்தல். நிம்மதியற்ற நிலையும் ஏற்படும். 5ஆம் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் புத்திர தோஷம் ஏற்படக்கூடும். குறைந்த வயதில் கண்டம் ஏற்படலாம். 6ஆம் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் பிறருக்கு உதவி செய்யக் கூடிய நல்ல மனம் படைத்தவராக, ஆரோக்கியம் மேன்மையுடன் கூடிய நீண்ட ஆயுள் உடையவராக, எதிரிகளை வெல்லக் கூடியவராக இருப்பார். 7வது இடமான களத்திர ஸ்தானத்தில் மாந்தி இருந்தால் மனைவியின் சொத்துக்களை அழிக்கக் கூடியவராக, சிலரை நம்பி ஏமாறக்கூடிய நிலை ஏற்படும்.8ம் இடத்தில் மாந்தி அமைந்திருப்பின் அதீத பசி கொண்டவராகவும் வீண் செலவு செய்பவராகவும் இருப்பார். 9வது இடத்தில் மாந்தி இருந்தால் தந்தைக்கு பாதகத்தை ஏற்படுத்தும். எப்போதும் பிரச்னைகளுடன் வாழக்கூடிய, பணக்கஷ்டத்துடன் இருப்பவராக வாழ்வார்.10ம் இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் வாழ்க்கை முழுவதும் சுயநலத்துடன் இருப்பார். யாரைப் பற்றியும் கவலை கொள்ளாதவராக இருப்பார். இருப்பினும் சிறப்பாக உழைத்து, தன் வாழ்க்கையை படிப்படியாக முன்னேற்றக்கூடியவராக இருப்பார். 11வது இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் வாழ்வில் நல்ல செல்வமும், செல்வாக்கும் கொண்டிருப்பார்கள். நல்ல துணை, மிகுந்த புகழ் மிக்கவராக திகழ்வார். 12வது இடத்தில் மாந்தி அமைந்திருந்தால் வீண் செலவுகள் ஏற்படும் சோம்பேறியாக இருப்பார். ஜாதகத்தில் மாந்தியுடன் இருக்கும் சுப கிரகங்களின் சேர்க்கை, நல்ல பார்வையைப் பொறுத்து இந்த பலன்கள் மாறுபடலாம்.
மாந்தி பரிகார தலங்கள் பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காடு ஆலயம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. இந்தத் தலத்தில் மாந்தி வழிபட்ட லிங்கம் உள்ளது, அங்கே சென்று அந்த சிவலிங்கத்தை வழிபட்டாலும் மாந்தி தோஷம் நீங்கும். கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பக்கத்தில் திருநரையூர் எனும் ஸ்தலத்தில் சனிபகவான் தனிச்சந்நிதியில் எழுந்தருளுகிறார். தன் மனைவி நீலாதேவி மகன்கள் குளிகன் மற்றும் மாந்தி என குடும்பத்தோடு அருள்பாலிக்கிறார். அங்கே சென்று முறையாக பூஜை செய்து வழிபட்டால் மாந்தி தோஷம் விலகும். தசரத சக்கரவர்த்தி தனக்கு ஏற்பட்ட நோய் தீர, இத்தலத்துக்கு வந்ததாகவும், இங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சனி பகவானை வழிபட்டு நிவாரணம் பெற்றதாகவும் தல வரலாறு கூறுகிறது. ராமபிரான், ராவணனை வதம் செய்து, அயோத்தி திரும்பும் போது, தந்தை வழிபட்ட இத்தலத்திற்கு வந்து நீராடி, மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டுள்ளார். இதே போல தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டைக்கு அருகே விளங்குளம் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயத்தில் சனி பகவான் குடும்பத்தோடு காட்சி தருகிறார். அங்கே சென்று வழிபட்டாலும் மாந்தி தோஷம் இல்லாமல் போகும்.